search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரவாயல் ஏரிக்கரை"

    மது போதையில் கார் டிரைவர் இறந்ததாக கருதப்பட்டதில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் தகராறில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடக்கிறது.
    பூந்தமல்லி:

    சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் மெயின்ரோடு ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36), கார் டிரைவர். இவருடைய மனைவி நளினி (34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 15-ந் தேதி வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் நண்பர் குமரேசன் (36) என்பவருடன் ராஜேஷ் மது அருந்தினார். போதை தலைக்கேறியதால் ராஜேஷ் காரிலேயே படுத்துக்கொண்டார்.

    இதுபற்றி ராஜேசின் மனைவி நளினிக்கு செல்போன் மூலம் குமரேசன் தகவல் தெரிவித்தார். நளினி கேட்டுக்கொண்டதால் ராஜேசுடன் காரை அவரது வீட்டுக்கு ஓட்டிவந்து வாசலில் நிறுத்தினார். கார் சாவியை நளினியிடம் கொடுத்துவிட்டு குமரேசன் சென்றுவிட்டார். ராஜேஷ் அதிக போதையில் இருந்ததால் அவரை நளினியால் வீட்டுக்குள் அழைத்துச்செல்ல முடியவில்லை. எனவே அவரை காரிலேயே படுக்க வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

    மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, காருக்குள் ராஜேஷ் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நளினி மற்றும் அவரது உறவினர்கள் ராஜேசை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ராஜேஷ் இறந்துவிட்டதாக நினைத்த அவரது உறவினர்கள் இதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்காமல் அவரது உடலை வீட்டுக்கு கொண்டுவந்து இறுதிச்சடங்குகள் செய்து புதைத்துவிட்டனர்.

    இந்த நிலையில், ராஜேஷ் குடிபோதையில் இறக்கவில்லை. அவரை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டதாக அவரது நண்பர் குமரேசன் குடிபோதையில் உளறினார். இதுபற்றி தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் குமரேசனை பிடித்து விசாரித்தனர். அதில் கள்ளக்காதல் தகராறில் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

    இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

    ராஜேசுக்கு அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி (34) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. ராஜேஷ் அடிக்கடி பத்மாவதி வீட்டுக்கு சென்று அவரை தொந்தரவு செய்துவந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒருகட்டத்தில் ராஜேசின் தொந்தரவு அதிகரித்ததால், குமரேசன் மூலம் ராஜேசை தீர்த்துக்கட்ட பத்மாவதி முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று மது போதையில் இருந்த ராஜேசை, குமரேசன் மீண்டும் மது அருந்தலாம் என்று கூறி அவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு தான் தயாராக விஷம் கலந்து வைத்திருந்த மதுவை அவருக்கு கொடுத்தார். அதை வாங்கி குடித்த ராஜேஷ் தடுமாறி காரில் அமர்ந்தார்.

    பின்னர் நளினிக்கு தகவல் தெரிவித்து அவரே காரில் கொண்டுபோய் வீட்டில் விட்டுச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து குமரேசன் மற்றும் பத்மாவதி ஆகிய 2 பேரை பிடித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்று  காலை ராஜேசின் உடலை தோண்டி எடுத்து, அந்த இடத்திலேயே தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
    மதுரவாயலில் மதுவில் வி‌ஷம் கலந்து கார் டிரைவர் கொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    போரூர்:

    மதுரவாயல் மெயின் ரோடு ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். கார் டிரைவர். இவரது மனைவி நளினி.

    ராஜேசுக்கு குடிபழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு ராஜேஷ் ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் குடிபோதையில் மயங்கி கிடப்பதாக மனைவி நளினிக்கு ராஜேசின் நண்பர் குமரேசன் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    உடனே அங்கு சென்ற நளினி மயங்கி கிடந்த ராஜேசை காரில் வீட்டிற்கு கொண்டு சென்றார். காலையில் எழுந்து பார்த்த ராஜேசை மயங்கிய நிலையிலேயே இருந்தார்.

    இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ராஜேஷ் உடலை மதுரவாயல் ஓம் சக்தி நகரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து செய்தனர்.

    இந்நிலையில் கணவர் ராஜேஷ் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர் குடித்த மதுபானத்தில் யாராவது வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மதுரவாயல் போலீசில் நளினி திடீரென புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜேசின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடக்கம் செய்யப்பட்ட ராஜேஷ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    ×